ஏக இறைவனை நிராகரித்துவிட்டு இணை வைக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த மக்கள். தங்கள் விருப்பத்திற்கு உகந்தவாறு மூன்று சிலைகள் செய்துவைத்துக் கொண்டு, ‘இவர்கள்தாம் எங்களின் கடவுளர்கள். இவர்களது பெயர்கள் சமதா, சமூதா, ஹாரா’ என்று அவற்றிற்கு பெயரிட்டுவிட்டு வழிபட ஆரம்பித்தார்கள். அல்லாஹ் அந்த மக்களில் இருந்தே அவர்களுக்கு ஹுது என்பவரை நபியாகத் தேர்ந்தெடுத்தான். 'அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்’ என்றான். ஹுது அலைஹிஸ்ஸலாம் தம் மக்களிடம் சென்றார்; ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அவர்கள், "எங்களைப்போல் நீயும் ஒரு மனிதன்தான். இப்படியெல்லாம்கூட நீ பொய்ச் சொல்வாயா? அதெல்லாம் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சொல்லிவிட்டார்கள்.
ஆது மக்களுக்கு மகா வலிமையைத் தந்திருந்தான் இறைவன். நவீன வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே ‘உசர உசரமாய்’ தூண்களெல்லாம் அமைத்து, பிரம்மாண்டமாய் நகரம் அமைத்து, உயரமான குன்றுகளிலெல்லாம் மிகப் பெரும் மாளிகைகளும் கோட்டைகளும் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
மனிதனுக்கு வலிமை ஏற்படுகிறது; அதைக் கொண்டு அவனால் இவ்வுலகில் ஏதோ சில பிரம்மாண்ட செயல்கள் புரியமுடிகிறது; அதைப்பார்த்து மக்களில் சிலர் மூக்கின்மீது விரல் வைத்து ஆச்சரியப்படுகிறார்கள். அவ்வளவுதான்! அடுத்து என்ன நிகழ்கிறது? அந்த மனிதனுக்கு அது அளவிலா மமதையையும் ‘தான்’ என்ற செருக்கையும் தந்து விடுகிறது. அது அத்தனையும் ஆது இன மக்களுக்கு வந்து சேர்ந்தது. தங்களை யாராலும் அசைக்கமுடியாது என்று திட்டவட்டமாய் நம்ப ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள்.
ஹுது (அலை) சொன்ன உபதேசங்களெல்லாம் செவிடன் காதில் வந்துவிழுந்த சங்கொலி ஆகிப்போனது. ஆனாலும் விடவில்லை; அலுக்காமல் தம் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார் ஹுது! ஆரம்பத்தில் இருந்த நையாண்டி மறைந்து எரிச்சலும் கோபமும் அதிகமாகி ‘என்ன இந்த ஆளுடன் ரோதனை! தம் இஷ்டத்திற்கு வீண் மிரட்டல் மிரட்டிக் கொண்டிருக்கிறார்’ எனறு நினைத்தவர்கள் இறுதியில் அவரிடம், "நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று சொல்லிவிட்டார்கள்.
சவால்! தங்களது வலிமை உசத்தி என்று அசட்டுத்தனமாய் நம்பி, இறைவனுக்கே சவால்!
‘இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்?’ என்று வந்தது அது. இறைவன் அனுப்பிவைத்த தண்டனை வந்தது!
அடர்ந்து திரண்டு கருமேகம் அவர்களை நோக்கி வர, ‘வளம் பெருக மழை வரப்போகிறது பார்’ என்று ஆவலுடன் காத்திருந்தார்கள் அவர்கள். வந்து சேர்ந்ததோ கொடுமையான சுழல்காற்று. கூடவே பேரொலி. சுற்றி வளைத்தது அவர்களை. வந்தது, நிகழ்ந்தது, முடிந்தது என்றில்லாமல் ஏழு இரவு, எட்டுப் பகல்கள் விடாமல் அடித்துத் துவைத்துச் சாய்த்துவிட்டுதான் ஒருவழியாய் ஓய்ந்தது அது. எல்லாம் முடிந்தபின் பார்த்தால் ஈச்சமரங்களை அடியுடன் பிடுங்கி எறிந்து போட்டால் எப்படி இருக்கும்? அப்படிக் கிடந்தார்கள் அந்த வலிமைமிகு ஆது மக்கள். அதற்குப்பிறகு அவர்களில் மிச்சம் மீதி என்று யாராவது? ம்ஹும்! ஒருவரும் இல்லை.
சுத்தமாக அந்த இனத்தைத் துடைத்துப் போட்டான் இறைவன்.